
ABOUT COLUMBUS TAMIL SCHOOL
நடிகர் திலகம் திரு சிவாஜி கணேசன் முன்னிலையில் 1996-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட கொலம்பஸ் தமிழ்ச்சங்கம், அமெரிக்காவின் மத்திய ஒஹாயோ மாநிலப்பகுதியின் ஒரு பெரும் தமிழ் இயக்கமாக செயல்பட்டு வருகிறது . இது ஆண்டுதோறும் கலை, இலக்கியம், அரசியல், சார்ந்த பல சிறப்பான தருணங்களைத் தொகுத்தளித்துக் கொண்டிருக்கிறது.
தாய்மொழி சார்ந்த சமூக அமைப்புகளின் வளர்ச்சியில் மண்ணில் பிறந்த சாதனையாளர்களின் பங்களிப்பும் மிகையானது. அந்த வகையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், திரை இசைப் பாடகர்கள் எஸ்.பி. பாலசுப்ரமணியம், மனோ, கார்த்திக், திரைப்பட மற்றும் நாடகப்புகழ் எஸ்.வி. சேகர், ஒய்.ஜி. மகேந்திரன், க்ரேசி மோகன், தொலைக்காட்சி நெறியாளர் கோபிநாத், பட்டிமன்ற புகழ் ராஜா மற்றும் திரு சாலமன் பாப்பையா என்று இன்னும் பலரை கொலம்பஸ் நகர் நோக்கிப் பயணப்பட வைத்தது இத்தமிழ்ச்சங்கம்.
இசை, நடனம், பேச்சு என எண்ணற்ற நிகழ்ச்சிகளை மேற்கொண்டு, தமிழ் சார்ந்த மக்களின் மத்தியில் ஒரு சமூக முத்திரையைப் பதித்திருக்கும் அதே வேளையில், தாய்நாட்டு உறவுகளின் இடர்கால அவசியங்களில் எல்லாம்- உதவிகளை முனைப்புடனே சேகரித்து, அதைச் செவ்வனே நடைமுறைப் படுத்தியிருக்கிறது கொலம்பஸ் தமிழ்ச்சங்கம்.
மட்டுமல்ல, தனது சந்ததியினர் தாய் மொழியாம் தமிழை மறவாமல் இருக்க தமிழ்ப் பள்ளி தொடங்கி 10 ஆண்டுகளாக சிறப்பாகப் பயிற்றுவித்துக் கொண்டிருக்கிறது. இதுவரை வந்த நமது பயணம் இனிமையானது. இனிமேலான பாதை நெடியதுமட்டுமில்லாமல் வலியதும்கூட…
"தமிழுக்கும் அமுதென்று பேர்! அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!"